<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்காக 27.12.2017 அன்று காத்திருப்பு போராட்டம் BSNLEU மற்றும் TNTCWU கூட்டான அறைகூவல்

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை. BSNLEU மற்றும் TNTCWU மாநில சங்கங்கள் இன்று (22.12.2017) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில் மாலை நேர தர்ணாவிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று நன்பகல் இது தொடர்பாக CGM அலுவலகத்தின் பொது மேலாளர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த பேச்சு வார்த்தையில் தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் மாநில தலைவரும், உதவி பொது செயலாளருமான தோழர் S.செல்லப்பா, மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் தோழர் K.சீனிவாசன், மாநில உதவி தலைவர் தோழர் K.V.சிவகுமரன் ஆகியோரும் நிர்வாகத்தின் சார்பில் பொதுமேலாளர் (HR) திரு மோகன், திரு ராஜாராமன் (DGMA) மற்றும் திருமதி கிருஷ்ணபிரியா (AGM(SR) ஆகியோர் கலந்துக் கொண்டனர். மாநில தலைமை பொது மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் தேவையான நிதிக்கு கார்ப்பரேட் அலுவலகத்தில் பேசி உள்ளதாகவும், மாநில நிர்வாகம் இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறிய பொது மேலாளர் போராட்டத்தை ஒத்தி வைக்க கேட்டுக்கொண்டார். ஆனால் ஊதியம் கிடைக்காமல் போராட்டம் ஒத்தி வைக்க இயலாது என்று நமது சங்கத்தின் சார்பில் உறுதியாக அவரிடம் தெரிவித்தோம். இன்றும் ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே இன்று கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் மாநில மையக் கூட்டம் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தது. TNTCWU மாநில தலைவர்களிடம் விவாதித்து அடுத்த கட்ட போராட்டத்தை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 27.12.2017 அன்று மாலை 4 மணி முதல் அனைத்து மாவட்ட பொது மேலாளர் அலுவலகங்களிலும் ”காத்திருப்பு போராட்டம்” நடத்த இரு மாநில சங்கங்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் அனைத்து ஒப்பந்த ஊழியருக்கும் ஊதியம் கிடைக்கும் வரை நாம் அலுவலகத்தில் காத்திருப்போம். எந்த பணிக்கும் - யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல் இந்த போராட்டத்தை நடத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட இரண்டு மாவட்ட சங்கங்களும் ஊழியர்களை தயார்படுத்த வேண்டும் என இரண்டு மாநில சங்கங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படும் ஒப்பந்த தொழிலாளர்களை பட்டினி போடும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும். ஒன்று பட்டு போராடி ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த முடிவினை அனைத்து மாவட்ட சங்கங்களும் உறுதியாக அமல்படுத்திட வேண்டும் என இரண்டு மாநில சங்கங்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக